முகப்பு ஆய்வு

ஆய்வு

நோக்கு

அனைத்து தொல்பொருளியல் மரபுரிமைகளை இனங்கண்டு அவற்றை ஆவணப்படுத்தல்.

பணி

இலங்கையில் தொல்பொருள் மரபுரிமைகளை இனங்கண்டு ஆவணப்படுத்தும் செயற்பாட்டின் முதன்மை நிறுவனமாக செயலாற்றுதல்.

நோக்கம்

  • ஆய்வுகளின் மூலம் இலங்கையில் தொல்பொருளியல் மரபுரிமைகளை அடையாளம் காணுதல்.
  • இலங்கையில் அசையும், அசையா தொல்பொருளியல் சொத்துக்களை ஆவணப்படுத்தல்.
  • தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
  • கலாசார சொத்துகள் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
  • இலங்கையில் தொல்பொருளியல் மரபுரிமையைப் பாதுகாத்தல்.

ஆய்வுப் பிரிவின் முக்கிய பணிகள்

  • விசேட மற்றும் துரித ஆய்வுகளை மேற்கொள்தல்.
  • தொல்பொருளியல் ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட இடங்களைப் பிரகடனப்படுத்துதல்.
  • அரும்பொருட்களை அழிவிலிருந்து தடுத்தல்.
  • தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வுகளை நடத்துதல்.
  • தொல்பொருளியல் ரீதியான இடங்கள், நினைவுச் சின்னங்கள் பற்றிய புவியியல் ரீதியான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் அதுதொடர்பான வரைபடங்களை இயற்றுதல்.
  • சமுத்திர ஆய்வுகளை மேற்கொள்தல்.
  • புராதன நீர்ப்பாசன மரபுரிமைகள் பற்றிய ஆய்வுப்பணிகளைத் திட்டமிடல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல்.
  • வேலைகளைத் திட்டமிடல்.
  • பல்வேறு மாவட்டங்களில் தொல்பொருளியல் இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குதல் மற்றும் கற்குழிகள் தொடர்பான கோப்புகளைப் பேணுதல்.

விசேட மற்றும் துரித ஆய்வுகளை நடத்துதல்.

தொல்பொருளியல் பணிகளோடு சம்பந்தப்பட்டவற்றைப் பேணிப் பாதுகாத்தல், கண்காட்சி, ஆய்வு, அகழ்வு வேலைகள் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காகத் தொல்பொருள் ரீதியாகத் தனித்துவமான இடங்களை இனங்காண்பது மிகமிக முக்கியமான பணியாகும். புராதன இடங்களையும் நினைவுச் சின்னங்களையும் விபரமாக ஆவணப்படுத்தி அறிக்கைகள் தயாரிக்கப்படும். இவற்றைவிட துரித தேவைகளின் பிரகாரம் துரித அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டிய இடங்களைப் பற்றிய அறிக்கைகளும் தயாரிக்கப்படும்.

மேலதிக விபரங்களைப் பார்ப்பதற்காக இத்தலைப்பின் மீது கிளிக் செய்யவும்.

1940ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 33, 34, 35 ஆகிய பிரிவுகளில் இதுபற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. தொல்பொருளியல் ரீதியான பாதுகாப்பான இடங்கள் பற்றிய விபரங்கள் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 33வது பிரிவில் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.

காணி ஆணையாளரின் அங்கீகாரத்துடன் அல்லது காணி ஆணையாளர் அங்கீகாரத்தை நிராகரித்தால் காணி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட காணியின் எந்தவொரு திட்டவட்டமான பிரதேசத்தையும் இக்கட்டளைச் சட்டத்தின் பணிகளுக்காகத் தொல்பொருளியல் பாதுகாப்பு பிரதேசமாக வர்த்தமானியில் வெளியிடப்படுகின்ற அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்த முடியும். இக்கட்டளைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அல்லது வேறுவிதமாக அரச காணியொன்றில் எந்தவொரு பிரதேசத்தையும் தொல்பொருளியல் பணிகளுக்காக ஒதுக்கியிருந்தால் அதை தொல்பொருளியல் பாதுகாப்பிடமாகக் கருத வேண்டும்.

நிருணயிக்கப்பட்ட அல்லது அரசாங்கம் சுவீகரித்த காணிகள் தொடர்பாக மாத்திரமே இச்செயற்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணியொன்றில் தொல்பொருளியல் ஆணையாளர் அல்லது அவருடைய கட்டளையின் கீழும் அதன் பிரகாரம் செயலாற்றுகின்ற  ஆளொருவரைத் தவிர்த்து ஒதுக்கப்பட்ட தொல்பொருளியல் பிரதேசமொன்றில் ஏதேனும் ஒரு பகுதியைப் பயிரிடுவதற்காக வெளியாக்குகின்ற அல்லது நிலப் பாகத்தில் பயிர்ச் செய்கின்ற ஏதேனும் கட்டிடத்தை அமைக்கின்ற அல்லது நிர்மாண பணிகளை மேற்கொள்கின்ற அல்லது ஏதேனும் மரமொன்றை வெட்டி அகற்றுகின்ற அல்லது ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் ஒழுங்கீனமான முறையில் முறைகேடாக வளைத்துக் கொள்ளப்படுகின்ற ஒவ்வொருவரும் தவறாளியாக வழக்கு விசாரணையின் பின்னர் குறிப்பிட முடியும். காணி நிருணயம் செய்யப்பட்ட அல்லது அரசாங்கத்தினால் சுவீகரிக்கபட்ட காணிகள் தொடர்பாக மாத்திரமே அவ்வாறு செய்ய முடியும்.

34வது பிரிவின் கீழ் எவரேனும் ஆளொருவர் தவறாளியாக்கப்பட்டதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படாதவிடத்து அல்லது மேன்முறையீடு செய்யப்பட்டு ஏற்புடையதான வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அல்லது உயர் நீதிமன்றததின் இறுதித் தீர்ப்பளிக்கும் கட்டளை வழங்கப்பட்டதன் பின்னர், தொல்பொருளியல் ஆணையாளரின் கோரிக்கையின் மீது மேற்படி தவறாளியாக்கப்பட்ட ஆளை தொல்பொருளியல் பாதுகாப்பிடத்திலிருந்து வெளியேற்றி அதன் உடைமையை தொல்பொருளியல் ஆணையாளருக்கு அல்லது அவருடைய பிரதிநிதிக்கு ஒப்படைக்கும்படி நீதவானுக்கு உத்தரவிடமுடியும். அக்கட்டளையை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் அவ்வாறு நடைமுறைப்படுத்திய விதத்தை பிஸ்கால் உத்தியோகத்தர் அல்லது சமாதான உத்தியோகத்தர், நீதவான் நீதிமன்றத்திற்கு ஒழுங்குமுறைப்படி அறிவித்தல் வேண்டும்.

தொல்பொருளியல் பாதுகாப்பிடத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தவறாளியாக்கப்பட்ட நபரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் அத்தொல்பொருளியல் பாதுகாப்பிடத்தின் உடைமையை தொல்பொருளியல் ஆணையாளருக்கு அல்லது பிரதிநிதிக்கு ஒப்படைக்கக்கூடிய வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்த பிஸ்கால் உத்தியோகத்தருக்கு அல்லது சமாதான உத்தியோகத்தருக்கு அல்லது அவ்விருவரில் எவரேனும் ஒருவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஓர் உத்தியோகத்தருக்கு முடியும். தொல்பொருளியல் ரீதியாக நிலப் பாகமொன்றை அரசாங்கம் சுவீகரிப்பது சம்பந்தப்பட்ட நடவடிக்கைமுறை 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 33, 34, 35 ஆகிய பிரிவுகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு காணியில் தொல்பொருள் இருப்பதாக அடையாளம் காண்கின்றபோது குறித்த காணி அரசாங்கத்திற்கு அல்லது தனியாருக்கு உரிமையான காணியாக இருப்பினும்கூட அதில் அத்துமீறிய பயிர்ச்செய்கை, குடியேற்றம், நிர்மாணம் என்பவற்றைத் தடுப்பதற்கும் அதன் நிலையான நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் அக்காணியை தொல்பொருளியல் பாதுகாப்பிடமாகப் பிரகடனப்படுத்த முடியும்.

  1. நிலப்பகுதியை அடையாளம் காணுதல்.
    • பிரதேச அலுவலகத்திலிருந்து அவதானிப்பு அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்தல்.
    • சம்பந்தப்பட்ட திட்டவரைபடங்களையும் அளவைத் திட்டங்களையும் கேட்டனுப்புதல்.
  2. காணி, அரசாங்கக் காணியா அல்லது தனியார் காணியா என்பதைப் பிரதேச செயலகத்திலிருந்து அறிந்துகொள்தல்.
    • தனியார் காணியாக இருக்கின்றபோது அதன் உரிமையாளரின் உரிமை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்தல்.
    • அரச காணியாக இருப்பின் சம்பந்தப்பட்ட காணியின் விபரங்களைப் பெற்றுக் கொள்தல்.
    • குறித்த நிறுவனத்திடம் திட்டவரைபடம், அளவைத்திட்டம் என்பவற்றைக் கேட்டனுப்பல்.
    • தனியார் காணியொன்றைச் சுவீகரிப்பதற்கு உரிமையாளரின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • அவருக்கு / அவளுக்கு நட்டஈடு செலுத்த வேண்டும்.
    • குறித்த பணிக்காக மதிப்பீட்டு அறிக்கையொன்றை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.
    • பிரதேச செயலாளர் அளவை கட்டளையொன்றை வழங்க வேண்டியது அவசியமாகும்.
    • பிரதேச செயலகத்தில் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த நிறுவனத்தின் தலைவர் மூலம் அமைச்சு செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • இதன்பொருட்டு சம்பந்தப்பட்ட மாதிரிப்படிவங்களை நிரப்ப வேண்டும்.
    • காணி ஒரு மில்லியன் ரூபாவுக்கு அல்லது அதைவிட குறைந்த தொகைக்கு மதிப்பிடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அங்கீகாரத்தையும் அதற்கு மேற்பட்ட மதிப்பீடாக இருந்தால் அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • அதன் பின்னர் பிரதேச செயலாளர் நட்டஈட்டைச் செலுத்தியதன் பின்னர் காணியைத் தொல்பொருளியல் பாதுகாப்பிடமாகப் பிரகடனப்படுத்துவதற்கு உரிய அறிவித்தல் வரைவை மும்மொழிகளிலும் தயாரிக்க வேண்டும்.
    • அவ்வரைபை அதன்பின்னரர் சட்டவரைஞருக்கு அனுப்பி அதன் பின்னர் அரசாங்க அச்சகத்தின் அதிபரைக்கொண்டு அச்சிட்டுக்கொள்ள வேண்டும்.
    • அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுவும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
    • அரச காணியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அக்காணி உரித்தாக இருக்கின்ற நிறுவனத்தின் உடன்பாட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் காணி ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • அதன் பின்னர் மேற்குறிப்பிட்டவாறு தொல்பொருளியல் பாதுகாப்பிடமாகப் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.
    • அத்தகைய அரச காணியொன்றில் அத்துமீறிக் குடியேறியவர்கள் இருப்பின் வெளியேற்றும் கட்டளையின் மூலம் அவர்களைக் காணியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

நட்டஈடு செலுத்த வேண்டியிருக்கின்ற ஒரு சில அரச காணிகள் தொடர்பாக மேற்குறிப்பிட்ட நடவடிக்கையையே பின்பற்ற வேண்டும்.

இதுசம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

  • பிரதேச செயலகம்
  • மாகாண சபை
  • பிரதேச சபை (உள்ளூராட்சி நிறுவனம்)
  • மகாவலி அதிகாரசபை.
  • காணி ஆணையாளர் திணைக்களம்.
  • காணி மீட்டல் திணைக்களம்.
  • காடு பேணல் திணைக்களம்.
  • வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்.
  • காணி அமைச்சு.

புராதன நினைவுச் சின்னங்களைப் பிரகடனப்படுத்துதல்.

  • 1940ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 16, 17, 18, 19ஆம் பிரிவுகளின் பிரகாரம் வர்த்தமானியில் அறிவித்தல் ஒன்றை வெளியிடுதவதன் மூலம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் புராதன நினைவுச் சின்னங்களைப் பிரகடனப்படுத்த முடியும்.
  • 1988ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் (திருத்த) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், 100 வருடங்களைக் கடந்த வரலாற்று ரீதியாகவும் தொல்பொருளியல் ரீதியாகவும் பெறுமதி மிக்க புராதன நிர்மாணங்கள், புராதன நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்படும்.
  • 1940ஆம் ஆண்டின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 16, 17ஆம் பிரிவுகளின் கீழ் அரச காணிகளில் அமைந்துள்ள புராதன மரங்களைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு குறித்த கட்டிடங்களையும் மரங்களையும் புராதன நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தமுடியும்.
  • தனியார் காணிகளில் இருக்கின்ற புராதன நிர்மாணங்கள் தொடர்பாக எதிர்ப்புகள் அழைக்கப்பட்டதன் பின்னர் கட்டளைச் சட்டத்தின் 19வது பிரிவின் பிரகாரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்த முடியும்.
  • சிற்சில இடங்களைத் தொல்பொருளியல் நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தியதன் பின்னர் அவற்றை நவீனமயப்படுத்தும் பணிகள் சேர்த்தல் அல்லது பேணிப் பாதுகாக்கும் பணிகள் என்பவற்றிற்காகத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முறையான அங்கீகாரத்தைப் பெறவேண்டியது கட்டாயமென 21வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பிரகடனப்படுத்தப்பட்ட நினைவுச் சின்னமொன்றை அழிக்கின்ற அல்லது சேதப்படுத்துகின்ற அல்லது திரிவுபடுத்துகின்ற ஆளெவரும் தவறாளியாகின்ற அதேநேரத்தில் நீதவான் ஒருவர் எதிரில் வழக்கு விசாரணையின் பின்னர் 50,000/- ரூபாவுக்குக் குறையாத 250,000/- ரூபாவுக்கு மேற்படாத அபராதத்திற்கு அல்லது 2 வருடங்களுக்குக் குறையாத 5 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனைக்கு இன்றேல் இவ்விரு தண்டனைகளுக்கும் உள்ளாகுதல் வேண்டும். வழக்கு விசாரணை முடிவடையும் வரை தவறாளிக்கு பிணை வழங்கமுடியாது எனவும் சட்டம் மேலும் குறிப்பிடுகிறது.
  • தொல்பொருளியல் நிலையங்கள் மற்றும் அவற்றின் குறைந்தபட்ச சூழலைக் கவனத்திற்கொண்டு தொல்பொருட்களுக்கும் பிரகடனப்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்களின் தொல்பொருளியல் மதிப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்குறிப்பிட்ட கட்டளைச் சட்டத்தின் 24(1) ஆம் பிரிவின் கீழ் கட்டளைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 400 மீற்றர் தூரத்திற்குள் கட்டிடங்களை அமைத்தல், கற்குழிகளை உண்டாக்குதல், சுரங்கங்கள் அகழ்தல், வெடிவைத்தல் என்பவற்றைத் தடைசெய்ய முடியும்.

அண்மைய ஆண்டுகளில் புதையல்களைத் தேடித் தொல்பொருட்களை அழிக்கும் பெரும் எண்ணிக்கையிலான சம்பவங்கள் பற்றித் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டன. ஆகவே 2008 சனவரி மாதத்தில் ஆய்வு செய்யும், ஆவணப்படுத்தும் அலகின் கீழ் இப்பிரிவு எதிர்கால சந்ததியினருக்காக அரும்பொருட்களைப் பாதுகாத்து வைக்கும் குறிக்கோளில் அமைக்கப்பட்டது.

வெறுமனே தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மாத்திரம் அரும்பொருட்களைப் பாதுகாக்கமுடியாது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்ற அதே நேரத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவி மிகமுக்கியமாகத் தேவைப்படுகிறது. தொல்பொருட்களைப் பேணிப்பாதுகாக்கும் பணியைப் பயனுறுதி மிக்கவகையில் செய்வதற்காக அரும்பொருட்களை அழிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற இப்பிரிவுடன் நெருக்கமாகத் தொடர்புகொண்டு செயற்படும் பொருட்டு 2008.03.04ஆம் திகதி பொலிஸ் அலகொன்று அமைக்கப்பட்டது.

நோக்கு

தொல்பொருளியல் மரபுரிமையை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைத்தல்.

பணி

  1. சட்டத்தின் மூலம் மாத்திரம் தொல்பொருட்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியாது என்பதனால் புதையல் தொடர்பான மாயை நம்பிக்கைகளை அகற்றுவதற்கு உதவும் பொருட்டு மக்களுக்கு அறிவூட்டல்.
  2. தொல்பொருட்களை அழிக்கின்ற அல்லது களவாடுகின்ற ஒழுங்கமைப்பு ரீதியாகச் செயற்படுகின்ற குழுக்களை இனங்கண்டு அவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருதல்.
  3. அரும்பொருட்கள் அழிக்கப்படுவது தொடர்பாகப் பொது மக்களிடமிருந்து கிடைக்கின்ற தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்தல்.
  4. அரும்பொருட்கள் அழிக்கப்படுவது மற்றும் களவாடப்படுவது தொடர்பில் தொல்பொருளியல் அலுவலகங்களுக்கும் காவல்துறைக்குமிடையில் தொடர்பைப் பேணுதல்.
  5. அரும்பொருட்கள் அழிக்கப்படுவது மற்றும் களவாடப்படுவது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள ஆட்கள் தொடர்பாக காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகளைத் தயாரித்தல்.

இக்காவல்துறை அலகு 24 மணித்தியாலங்களும் பொது மக்களிடமிருந்து கிடைக்கின்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்ற அதேநேரத்தில் தொல்பொருளியல் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டு காவல்துறை தலைமை நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் நடத்தப்படுகிறது.

2008.03.04 முதல் 2008.12.31 வரையிலான காலப்பகுதியில் அரும்பொருட்களை அழிக்கும் மற்றும் களவாடும் 208 சம்பவங்கள் இக்காவல்துறை அலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 2009.01.01 முதல் 2009.06.15 வரையிலான காலப்பகுதியில் அத்தகைய 110 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற கட்டளையின் மீது அல்லது பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் மீது அல்லது தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படும் தகவல்களின் மீது சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் காவல்துறை அவ்விடங்களைப் பரிசோதித்து பிரதேச தொல்பொருளியல் அலுவலகத்தின் மூலம் குறித்த அறிக்கைகளை ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் பிரிவுக்கு அனுப்பும்போது அது தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகத்தின் அல்லது ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னர் அவ்விசேட பிரிவு சம்பந்தப்பட்ட அறிக்கைகளைத் தயாரித்து அரும்பொருட்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக ஆய்வு / ஆவணப்படுத்தல் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளரின் கையொப்பத்துடன் காவல்துறைக்கு அல்லது நீதிமன்றத்திற்கு வழங்கப்படும்.

அரும்பொருளொன்று அழிக்கப்படுவதை அல்லது களவாடப்படுவதை அல்லது அவ்வாறு செய்ய முயல்வதை நீங்கள் கண்டால் நீங்கள் அது பற்றி பின்வரும் முகவரிக்கு அறிவிக்க முடியும். அருங்கலைப் பொருட்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் விசேட காவல்துறை அலகு 24 மணித்தியாலமும் இயங்குகிறது.

அரும்பொருட்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் விசேட அலகு,
ஆய்வு, ஆவணப்படுத்தல் பிரிவு,
தொல்பொருளியல் திணைக்களம்,
ஸ்ரீமத் மாக்கஸ் பர்னாந்து மாவத்தை,
கொழும்பு - 07.

அளவில் 0.25 ஹெக்டயருக்கு மேற்பட்ட காணியொன்றில் ஏதேனும் உத்தேச அபிவிருத்திக் கருத்திட்டமொன்றைச் செயற்படுத்தவிருக்கின்றபோது தொல்பொருளியல் தாக்கம் தொடர்பான மதிப்பீடொன்றைப் பெற்றுக்கொள்வது சட்ட ரீதியான தேவையாகும்.

தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் செயற்பாட்டின் போது அபிவிருத்திக் கருத்திட்டம் செயற்படுத்தப்படவிருக்கின்ற காணியில் அரும்பொருட்கள் ஏதேனும் இருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்படுகின்ற அதே நேரத்தில் அத்தகைய அருங்கலைப் பொருட்கள் அங்கு இருப்பின் கருத்திட்டம் காரணமாக அவற்றிற்கு ஏற்படும் தாக்கங்களை எடுத்துக்காட்டி செய்ய வேண்டிய மாற்று ஆய்வுகளையும் அறிக்கைகளையும் பற்றிய விடயங்களை முன்வைக்க வேண்டும்.

தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வு தொடர்பாக இலங்கையில் சட்டம் பின்வருமாறு அமைகின்றது.

47வது பிரிவின் கீழ் கலாசார, மத அலுவல்கள் அமைச்சரினால் 2004.04.04ஆம் திகதியிட்ட 1152 / 14ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளையுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 1998ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் (திருத்த) சட்டத்தின் 43(ஆ) பிரிவு அச்சட்டத்தை விளக்குகிறது. இக்கட்டளைகள், 2000ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க கருத்திட்டக் கட்டளைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

இதன் பிரகாரம் பின்வரும் ஒவ்வொரு வகையிலும் கருத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் தொல்பொருளியல் திணைக்களத்தின் எழுத்துமூல அனுமதியைப் பெறவேண்டும்.

01. (a)
போக்குவரத்து முறைமைகளை அபிவிருத்தி செய்தல்.
1. தேசிய அல்லது மாகாண பாதைகளை அமைத்தல்.
2. புகையிரதப் பாதைகளை அமைத்தல்.
3. விமான நிலையங்களையும் ஓடுபாதைகளையும் அமைத்தல் அல்லது அவற்றை விரிவாக்கல்.
(b) நீர்ப்பாசனக் கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்தல்.
1. குளங்களை அமைத்தல் அல்லது புதுப்பித்தல்.
2. நீரோடைகள் அல்லது கால்வாய்களை அமைத்தல் அல்லது புதுப்பித்தல்.
(c) மின் உற்பத்தியும் ஊடுகடத்தலும்.
(d) விவசாயக் கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்தல்.
(e)
குடியமர்த்தும் கருத்திட்டங்கள்.
(f)
தொழில்நுட்ப இயந்திர உபகரணங்களைப் பொருத்துதல் அல்லது கைத்தொழில் மற்றும் பூந் தோட்டம் அபிவிருத்தி செய்தல்.
(g) புனரமைப்பு கைத்தொழில் அபிவிருத்தி.
(h) மேட்டுநிலங்களை அல்லது சேற்றுநிலங்களை நிரப்புதல்.
(i) மேட்டுநிலங்களில் அல்லது சேற்று நிலங்களில் நீர் நிரப்புதல்.
(j) அளவில் இரண்டு ஹெக்டயருக்கு மேற்பட்ட காணிகளை வெளியாக்குதல்.
02. (a) வீடமைப்புத் தொகுதிகளை அமைத்தல்.
(b) தேசிய அரச பேரவையின் 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் தீர்மானங்களின் பிரகாரம் ஹோட்டல் மற்றும் ஏனைய அனைத்து வர்த்தகக் கட்டிடங்களையும் அமைத்தல்.
(c) வீடமைப்பு கைத்தொழில் மற்றும் வர்த்தக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ஒன்றிணைந்த பல்வகை அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துதல்.
(d) அளவில் இரண்டு ஹெக்டயருக்கு மேற்பட்ட அனைத்துக் காணிகளையும் வெளியாக்குதல்.
03. இருபத்தைந்து சதுர மீற்றருக்கு மேற்பட்ட இயற்கை நிலப்பகுதியைக் கொண்டுள்ள இயற்கைக் குகைகள், கற்குகைகள் மற்றும் குகைகளின் உட்பக்கத்தை வெளியாக்குதலும் அமைத்தலும்.
04. வடிகால், நீர், எரிவாயு, மின்சாரம், தொலைபேசி என்பவற்றிற்கான கொன்டியும் குழாய்களைப் புதைக்கப்பட்டு 500 மீற்றரை மிஞ்சி அகழ்தல்.
05. கற்கள், சரளைக்கற்கள், கனிப்பொருட்கள் அல்லது மண் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் கிடங்குகள் அமைத்தல் மற்றும் கற்களை வெடிவைத்துத் தகர்த்தல்.
(a) நாட்டின் உள்முகத்தில் காணித்துண்டில் 0.25 ஹெக்டயருக்கு மேலுள்ள படிவுகளை அடையாளமிட்டு கண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள சுரங்கங்களை அகழ்தல்.
(b) கடலடியிலிருந்து அனைத்து விதமான பொருட்களைக் கரைக்குக் கொண்டுவருதல், கனி பொருட்கள் பெற்றுக்கொள்தல் என்பவற்றிற்கான நடவடிக்கையை எடுத்தல்.
06. துறைமுகங்கள் அல்லது படகுத்துறைகளை அமைப்பதற்கு அல்லது விரிவாக்குவதற்காகக் காணிகளை வெளியாக்குதல் மற்றும் கடலடியைச் சேதப்படுத்துதல்.

  1. முதலீட்டாளர் உத்தேசக் கருத்திட்டம் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்.
  2. அவ்வாறு அறிவித்தபின் தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வுக்காக விண்ணப்பிக்கும் மாதிரிப் படிவமொன்று முதலீட்டாளருக்கு (திட்டமுன்மொழிவு) அனுப்பி வைக்கப்படும்.
  3. முதலீட்டாளர் ஒழுங்காகப் பூர்த்தி செய்த மாதிரிப் படிவத்தை திணைக்களத்தில் சமர்ப்பிக்கின்றபோது அதன் பிரதியொன்றைப் பிரதேச தொல்பொருளியல் அலுவலகத்திற்கு அனுப்பி சம்பந்தப்பட்ட இடம் தொடர்பான அடிப்படை அறிக்கையொன்று அழைப்பிக்கப்படும்.
  4. பிரதேச உதவிப் பணிப்பாளரின் பரிந்துரையுடன் அவதானிப்பு அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட காணியில் அரும்பொருட்கள் எவையும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கருத்திட்டத்திற்காக அக்காணியை விடுவிக்க முடியும். தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென அடிப்படை அறிக்கையில் முன்மொழியப்படுமானால், அவ்வாறு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  5. உத்தேச கருத்திட்டம் தொடர்பாக தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொள்வதற்காகத் தொல்பொருளியல் திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ள 17 முகவர்களிடமிருந்து ஏலவிலை கோரப்படும்.
  6. நிதிச்சபை கூடி அந்த ஏல விலைகளைத் திறக்கும். நிதிச்சபை பின்வருவோரைக் கொண்டிருக்கும்.
    • தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம்.
    • தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர்.
    • மத்திய கலாசார நிதியப் பணிப்பாளர்.
    • தொல்பொருள் விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவர்.
  7. தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வை நடத்துவதற்குத் தகுதியான முகவர்கள் நிதிச் சபையினால் தெரிவு செய்யப்படுவர்.
  8. நிதிச் சபையினால் தெரிவு செய்யப்படுகின்ற முகவருக்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தைத் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகத்தின் பெயரில் வைப்பிலிடும்படி முதலீட்டாளருக்கு அறிவிக்கப்படும்.
  9. சம்பந்தப்பட்ட ஏலவிலை தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தொல்பொருளியல் திணைக்களம் முகவருக்கு அறிவிக்கும்.
  10. முதலீட்டாளர் குறித்த பணத்தை தொல்பொருளியல் பணிப்பாளர் நாயத்தின் பெயரில் வைப்பிலிட்ட பின்னர் அதுபற்றி முதலீட்டாளருக்கு அறிவிக்கப்படும்.
  11. குறித்த முகவருக்கு அறிவித்து 06 வாரங்கள் கடப்பதற்கு முன்னர் தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வறிக்கையைத் திணைக்களத்திற்கு அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பாவிட்டால் அம்முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திணைக்களத்திற்கு முடியும்.
  12. குறித்த முகவர் தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வை நிறைவு செய்து அதன் அறிக்கையைத் திணைக்களத்திற்கு சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த பணத்தொகை அம்முகவருக்கு விடுவிக்கப்படும்.
  13. அத்தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வறிக்கையை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பிவைப்பது அடுத்த கட்ட நடவடிக்கையாகும். அமைச்சரின் பரிந்துரையின் மீது தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் குறித்த கருத்திட்டம் தொடர்பான தீர்மானத்தை வெளியிடுவார்.

மேலே குறிப்பிடப்பட்டிருப்பது தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் செயற்பாடு சம்பந்தமான அடிப்படை நடவடிக்கை முறையாகும். இதன்போது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

  1. தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்கின்ற ஆய்வின் பிரகாரம் காணியை விடுவிக்க முடியாவிட்டாலும்கூட ஆய்வுக்கான செலவுகளை முதலீட்டாளர் செய்ய வேண்டும்.
  2. மேலும் தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்கின்ற ஆய்வை மேற்கொள்கின்ற முகவர், மேலோட்டமான அவதானிப்பின் மூலம் திருப்தியடையாமல் அகழ்வு வேலைகளைச் செய்யவேண்டுமென ஆலோசனை தெரிவித்தால் அதற்கான செலவுகளையும் முதலீட்டாளரே ஏற்க வேண்டும். அகழ்வுப் பணிகளின் பின்னர் காணியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய தேவையேற்படின் அச்செலவையும் முதலீட்டாளரே ஏற்க வேண்டும். ஏதேனும் ஒரு தொகைப் பணம் மிஞ்சினால் அதை முதலீட்டாளருக்கு திருப்பிச் செலுத்த தொல்பொருளியல் திணைக்களம் கட்டுப்பட்டுள்ளது.
  3. அகழ்வு அறிக்கையையும் பேணிப் பாதுகாத்தல் அறிக்கையையும் அங்கீகாரத்திற்காக அமைச்சுக்கு அனுப்பவேண்டியது திணைக்களத்தின் பொறுப்பாகும்.

சமுத்திரம் சார்ந்த தொல்பொருளியல் நிலையங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், இடங்கள் தொடர்பான ஆய்வு, தகவல்களை ஆவணப்படுத்திக்கொள்தல், அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கையெடுத்தல் மற்றும் நாட்டின் கரையோரப் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் தொல்பொருளியல் ஆய்வுகளை மேற்கொள்தல் என்பவற்றுடன் தொடர்புபடுகிறது.

இவ்வாய்வுகளின்போது மனிதனால் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துவிதமான பௌதிகக் காரணிகள் உட்பட மூழ்கியுள்ள கப்பல்கள், நீரில் மூழ்கியுள்ள துறைமுகங்கள், குடியேற்றத் திட்டங்கள் போன்றவைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். தரையில் தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கையர்கள் வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளனர் என்பதற்கு சாட்சி பகர்கின்றன. இலங்கை நிச்சயமாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு தீவாக இருந்திருக்கின்ற அதே நேரத்தில், இலங்கையர்கள் வேறு நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் படகுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். நாட்டைச் சுற்றிவர பல இயற்கைத் துறைமுகங்கள் இலங்கைக்கு இருந்துள்ளன.

கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக நீரில் மூழ்கியுள்ள புராதன துறைமுகங்கள் மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இருப்பதன் காரணமாகவும் மூழ்கியுள்ள கப்பல்கள் காரணமாகவும் கடலுக்கு அடியில் அரும்பொருட்கள் உருவாகியுள்ளன.

இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியுடன் தொடர்புடைய கடல் மார்க்கத்தின் மத்தியில் இத்தீவு அமைந்திருப்பதன் காரணமாக இலங்கையைச் சுற்றிவர கடற்கரைப் பிராந்தியத்தில் வாழ்ந்த  புராதன மனிதனின் நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்குப் பல சந்தர்ப்பங்களை உருவாக்கித் தருகின்ற அரும்பொருட்கள் பல இருக்கின்றன.

கடல் அடியில் படிந்திருக்கின்ற அரும்பொருட்களைச் சார்ந்து புராதன மானிட செயற்பாடுகளைக் கற்றறியும் விடயத்தில் தொல்பொருளியல் கவனம் செலுத்துகின்றது.

இலங்கைக்குரிய கடல் நீரில் படிந்திருக்கின்ற அரும்பொருட்களின் உரிமை, 1998ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் (திருத்த) சட்டத்திலிருந்து திருத்தப்பட்ட 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் 3வது உப பிரிவின் மூலம் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

  • விவசாயிகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்தல்.
  • மெக்னட் மீற்றர், சைட் ஸ்கேனர் மற்றும் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி புராதன துறைமுகங்களைச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொள்தல்.
  • நீரில் மூழ்கும் பயிற்சிபெற்ற தொல்பொருளியல் உத்தியோகத்தர்கள் மூலம் கடலில் மூழ்கி கடலடியில் ஆய்வுகளை மேற்கொள்தல்.
  • நாடுகளுக்கிடையிலான தூரங்கள் மற்றும் விரிவகலம் தொடர்பான தேசப்படங்கள், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றின் மூலம் பெறப்படுகின்ற தகவல்களின் பிரகாரம் இடங்களை விபரமாகக் குறித்துக்கொள்தல்.
  • தொல்பொருள் பற்றிய ஆவணங்களைப் பேணுதல்.

இதுதொடர்பாக ஏற்புடையதான சட்டம் 1998ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் (திருத்த) சட்டத்தில் திருத்தப்பட்ட 1940ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 15ஆம் பிரிவாகும்.

தரையில் உள்ள தொல்பொருட்கள் அழிவடைவதைத் தடுப்பது எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு உள்ளூர் நீரில் உள்ள தொல்பொருட்கள் அழிவடைவதைத் தடுப்பதும் முக்கியமானதாகும்.

கடல் சார்ந்த தொல்பொருட்களை அழிக்கும் பரவலான முறைகளுக்கிடையே சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கி உக்கிப்போகின்ற கப்பல்களை, டைனமைட் பாவித்து அல்லது வேறு முறைகளில் அழித்தல் மற்றும் அவற்றின் பாகங்கள் அல்லது அவற்றில் உள்ள அரும்பொருட்களை தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளாமல் தரைக்குக் கொண்டு வருவதைக் குறிப்பிட முடியும்.

நாட்டின் கரையோரப் பிராந்தியத்தில் கப்பல் துறைகளை அல்லது துறைமுகங்களை அமைக்கும் அல்லது விரிவாக்கும் பொருட்டு காணியை வெளியாக்க அல்லது கடல் அடியைச் சேதப்படுத்துவதற்கு முன்னர் அத்தகைய பணியை மேற்கொள்ள எதிர்பார்க்கின்ற முதலீட்டாளர் தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கு ஏற்புடையதான சட்டத்தையும் நடவடிக்கையையும் பற்றிய மேலதிக விபரங்கள் "தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வு" என்பதன் கீழ் விபரிக்கப்பட்டுள்ளன.

இவ்வலகு, தொல்பொருளியல் நிலைய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள புவியியல் நிலையங்கள் தொடர்பான தகவல்களை GIS இயந்திரங்கள் மூலம் பெற்று அத்தகவல்களை கணனி தரவு வங்கியில் வைத்துக்கொள்கிறது.

புராதன இலங்கையில் தலைசிறந்த நீர்ப்பாசன முறையை உலகத்தின் எந்தவொரு புராதன நாகரிகத்துடனும் ஒப்பிடமுடியாது. உயர்ந்த மலைகள் இரண்டை இணைத்து நீரைச் சேகரித்தல், நடுநிலை அமைவிடத்தின் பிரகாரம் குளங்களை அமைத்தல் மற்றும் அணைகளைக் கட்டுதல் போன்றவை தொடர்பாக புராதன இலங்கையரிடமிருந்த அறிவு தன்னிகரற்றதாகும். தற்பொழுது 34,000க்கு மேற்பட்ட பாரிய நீர்த்தேக்கங்களும் பெருந்தொகையான கிராமிய குளங்களும் அவற்றோடிணைந்த கால்வாய்கள் அணைக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையிலும் இருக்கின்றன. இம்மரபுரிமையை அடையாளம் கண்டு, பேணிப்பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 06:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது